மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பும் முடிவை வரவேற்றுள்ளார். இருப்பினும், தொண்டு மற்றும் சிறுபான்மை நிறுவனங்களைப் பாதிக்கும் இந்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்கள் முதன்மைக் கோரிக்கை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
FCRA திருத்த மசோதா முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பி.வில்சன்
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை விரிவான ஆய்விற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்பதாகவும், அதேவேளையில் மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்களது முதன்மையான கோரிக்கை என்றும் சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள CRA திருத்த மசோதாவுக்கு எதிராக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் தொடர்ந்து பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பது தொடர்பாக பி.வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், FCRA திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பியிருப்பது நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைஎன்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வாய்ப்பு
மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்படுவதன் மூலம், அதனை நாடாளுமன்ற அளவில் விரிவாக ஆய்வு செய்வதற்கும், பல்வேறு தரப்பினரிடம் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பி.வில்சன் தெரிவித்துள்ளார். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளை முழுமையாகப் பரிசீலிக்க இது முக்கியமான வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொண்டு, கல்வி, சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்படும் என கவலை
முன்மொழியப்பட்டுள்ள FCRA திருத்தங்கள், தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேய சேவை, சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆரம்பம் முதலே மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக பி.வில்சன் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற முடியாத சூழலில், தங்களுடைய கருத்துகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் முன் விரிவாக வைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறையில் தொடர் போராட்டம்
கடந்த பல மாதங்களாக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் மேற்கொண்ட பிரசாரம் அமைதியானதாகவும், ஜனநாயக ரீதியானதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், தொடர்ச்சியானதாகவும் இருந்து வந்துள்ளதாக பி.வில்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், அப்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், FCRA திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏப்ரல் 16-ஆம் தேதி தனது தலைமையில் டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
தொடர்ந்து கூட்டு நடவடிக்கை மன்றம் நடத்திய தேசிய இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக பி.வில்சன் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான தேசியத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய பிரார்த்தனை, உண்ணாநோன்பு
கூட்டு நடவடிக்கை மன்றத்தின் அழைப்பை ஏற்று, ஜூன் 28-ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள தேவாலயங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் மிஷன் அமைப்புகள் சார்பில் தேசிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பு கடைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 3-ஆம் தேதி JAFM சார்பில் நாடு தழுவிய தேசிய எதிர்ப்பு தினம் நடத்தப்பட்டதாகவும் பி.வில்சன் கூறியுள்ளார். அன்றைய தினம் நாடு முழுவதும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து சேகரிப்பு இயக்கங்கள் மற்றும் மனுக்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சர்வதேச மையத்தில் ஆலோசனைக் கூட்டம்
ஜூலை 20-ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் பி.வில்சன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷாவை சந்தித்த குழு
ஆகஸ்ட் 6-ஆம் தேதி தனது தலைமையில் இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சுகாதார மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாகவும் பி.வில்சன் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, FCRA திருத்த மசோதாவால் பாதிக்கப்படக்கூடிய கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் நிறுவனங்களின் கவலைகளை விரிவாக மத்திய உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து, கிறிஸ்தவ சமூகத் தலைவர்களுடன் இணைந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்ததாக பி.வில்சன் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருவதற்கும், ஆதரவு அளித்து வருவதற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அப்போது நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மசோதாவை திரும்பப் பெறுவதே முதன்மை கோரிக்கை
FCRA திருத்த மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதை வரவேற்றாலும், மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது பிரதான கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று பி.வில்சன் தெரிவித்துள்ளார். கூட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆய்வு மூலம் பல்வேறு தரப்பினரின் கருத்துகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகள் விரிவாக முன்வைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த பல மாதங்களாக தங்களுடன் நின்ற தலைவர்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மாநிலங்களவை உறுப்பினரும், சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.


