மதுரை

கள்ள உறவை கைவிட மறுத்ததால் மகளை கழுத்தை நெரித்து வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்த தந்தையை காவலாளர்கள் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் சரகத்திற்கு உட்பட்டது அரும்பனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேந்தவர் கோபால் (51). இவருக்கு சுகன்யா (24) என்பவர் உள்பட மூன்று மகள்கள் உள்ளனர். 

மூத்த பெண்னான சுகன்யாவிற்கும், மேலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் திருமணம் நடந்து 2½ வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

சரவணன் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருவதால், சுகன்யா அடிக்கடி பெற்றோர்  வீட்டிற்கு வந்துச் செல்வது வழக்கம். 

இந்த நிலையில் நேற்று சுகன்யா விஷம் குடித்து தற்கொலை செய்ததாக, கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவலாளார்களுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒத்தக்கடை காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் விசாரணையில் ஈடுபட்ட காவலாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  சுகன்யாவின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது உடற்கூராய்வில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவலாளர்கள் விசாரணையை தொடங்கினர். 

அந்த விசாரணையில் தந்தை கோபால், மகளின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. பின்னர், காவலாளர்கள், கோபாலை கைது செய்து விசாரணையைத் தொடர்ந்தனர். 

அதில், கணவர் வெளிநாடு சென்ற நிலையில், மகளுக்கு வேறு நபருடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அதைக் கண்டித்ததாகவும், ஆனால், தனது பேச்சைக் கேட்காமல் கள்ள உறவை தொடர்ந்ததால் கோபத்தில் மகளை கழுத்தை நெரித்து, வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து காவலாளர்கள், மகளை கொலை செய்த குற்றத்திற்காக தந்தை கோபாலை கைது செய்தனர்.