திராவிட விடுதலை கழக பிரமுகர் பாருக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாருக். பழைய இரும்பு கடையில் வியாபாரம் செய்யும் இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி வழக்கம்போல் பணியை முடித்து விட்டு இரவு வீட்டில் தூங்கியுள்ளார். அப்போது திடீரென ஒரு போன் கால் வந்தது. அதில் வியாபாரம் விஷயமாக பேச வேண்டும் எனவும் மாநகராட்சி கழிவு நீர் பண்ணை அருகே வருமாறும் மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற பாருக்கை மறைந்திருந்த மர்ம நபர்கள் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பாருக்கின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

பின்னர், படுகாயம் அடைந்த பாருக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த வழக்கில் அன்ஷாத், சதாம் உசேன், சம்சுதீன், ஜாபர், அக்பர் ஜிந்தா, முகமது முனாப் உள்ளிட்ட 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்த வழக்கு கோவை 5 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.