கூடலூர் பகுதியில் வறட்சியால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பள்ளங்களை ஆழப்படுத்துவதற்கு பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டி நடவடிக்கை எடுக்க ஒருவாரம் கெடு தந்துள்ளனர்.
கூடலூர் பகுதியில் கோடை கால வறட்சியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் செடி, கொடிகள், மரங்கள் காய்ந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்படுகிறது. மேலும் விவசாய பயிர்களும் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட புலியாளம், முதுகுளி, நாகம்பள்ளி, நம்பிக்குன்னு உள்பட பல கிராமங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.
இந்த கிராமங்கள் அமைந்துள்ள இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தபோதும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
மேலும், விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி என்பது சிறிதளவும் இல்லை. இருப்பினும் கூடலூர் பகுதியில் 6 மாதம் மழை பெய்யும் என்பதாலும், மீதமுள்ள காலங்களில் நிலத்தின் ஈரப்பதத்தை கொண்டு அதை தாங்கி வளரக்கூடிய பாகற்காய், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியில் முதுமலை விவசாயிகள் தங்களது நிலத்தில் 10 முதல் 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதில் சுரக்கும் நீரை டீசல் எந்திரம் மூலம் இறைத்து தங்களது பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பள்ளத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து முதுமலை மக்கள் மறுவாழ்வு சங்க செயலாளர் கூறியதாவது:
முதுமலையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் பள்ளம் தோண்டி அதில் கிடைக்கும் நீரை கொண்டு பாகற்காய் உள்ளிட்ட பயிர்களை பாதுகாத்து வருகிறோம்.
இருப்பினும் வறட்சியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.
இப்பகுதியில் நீர்பாசன வசதியும் கிடையாது. இதனால் பாகற்காய் செடிகள் கருக தொடங்கி உள்ளது. இதனை தடுக்க பள்ளங்களை ஆழப்படுத்துவதற்கு பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
