திருப்பூர் மாவட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகின்றபோதும் மாவட்த்திற்கென் தனி வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகம் இல்லை. எனவே, விவசாயிகள் தங்களது குறைகளை முறையிடுவதற்கு திருப்பூர் மாவட்டத்துக்கென தனியாக வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகம் வேண்டும் என்று விவசாயிகள் கோரினர்.

திருப்பூரில் வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியது:

“திருப்பூர் மாவட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகின்றன. விவசாயிகள் தங்களது குறைகளை முறையிடுவதற்கான வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகம் கோவையில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கென தனியாக அலுவலகம் அமைக்க வேண்டும்.

பல்லடம் பிஏபி விரிவாக்கத்துக்காக நிலம் அளித்த சில விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் உள்ளது. விரைவில் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை தேவை. மாவட்டத்தில் 70 சதவீத விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை. அதனை பெற்றுத் தர வேண்டும்.

குண்டடம் ஒன்றியம், செவந்தாம்பாளையம் சாலையின் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. அந்த மரங்களை அகற்ற வேண்டும். தாராபுரம் அருகே மணக்கடவு கிராமத்தில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. அங்கு ஒரு குடம் குடிநீர் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.

கணியூர், ஐஓபி வங்கி கிளையில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. விவசாயிகளுக்கு கடன் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடனைச் செலுத்தாத விவசாயிகளின் புகைப்படத்தை ஒட்டி விளம்பரப் பதாகை வைப்பதை வங்கி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.

அமராவதி, கொளிஞ்சிவாடி அணைக்கட்டுக்கு அருகில் இருந்து 200 ஏக்கர் தனியார் நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பழைய அமராவதி பாசன வாய்க்கால்களான அலங்கியம், கொளிஞ்சிவாடி, தளவாய்பட்டினம் உள்ளிட்ட 4 வாய்க்கால்களில் இருந்து சாகுபடிக்காக உயிர்த்தண்ணீரை 4 நாள்களுக்குத் திறந்துவிட வேண்டும். புதிய அமராவதி பாசன வாய்க்கால்களை குடிமராமத்து திட்டம் மூலம் சீர் செய்ய வேண்டும்.

வட்டமலைக்கரை ஓடை அணை கடந்த 30 ஆண்டுகாலமாக வடு காணப்படுகிறது. ரூ.255 கோடி மதிப்பில் 25 கி.மீ. தொலைவுக்கு அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர அரசு திட்டமிட்டது. ஆனால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறைந்த செலவில் வேறு ஏதேனும் திட்டம் இருந்தாலும் அதைச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்ட வேண்டும்.

இந்நிலையில் எங்கள் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வறட்சியைப் போக்கவும், விவசாயிகளைக் காக்கவும் அணைக்கு தண்ணீர் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.