farmers emphasis to build dams in Cauvery river
கரூர்
காவிரியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள், ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.
இதில், "தோகைமலை கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
குளக்கரையில் மரக்கன்றுகள் நட வேண்டும்.
நங்கவரம் கிளை வாய்க்கல்களை தூர்வார வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதாவதால் கோடைகாலத்தில் கூடுதலாக டிரான்ஸ்பார்மர்களை இருப்பு வைத்து அவசர தேவைக்கு உடனடியாக மாற்ற வேண்டும்.
நெரூர் வாய்க்கால் கொரம்பிற்கு மேல் பகுதியில் காவிரி வலது கரை பகுதியில் டீசல் என்ஜின்கள் வைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. நெரூர் தலைப்பிற்கு தண்ணீர் வரும் பகுதியில் பைப்லைன் போட்டு தண்ணீர் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டும் தடுப்பணையினை கூடலூர் கிராமத்தில் அமைக்க வேண்டும்.
அமராவதியில் தடுப்பணை கட்டப்படும்போது கடைமடை பகுதி விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு அதிகாரி ஒருவர் நியமிக்க வேண்டும்.
விவசாய மின் இணைப்பு, வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்திட சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
குளித்தலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் அன்பழகன் பேசியது: "மாவட்டத்தில் கால்நடை மருந்தகத்திற்கு உதவி மருத்துவர் நியமிக்க பரிசீலிக்கப்படும். மருந்தகம் அமைந்துள்ள கிராமத்தில் மருத்துவர்கள் வரும் கிழமை, நேரம் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 2 இலட்சம் மரக்கன்றுகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஏரி, குளம் மற்றும் நீர் நிலைப்பகுதி கரையோரம் நடப்பட உள்ளது. மழைக்காலம் தொடங்கிய பின் ஒரு நாள் மொத்தமாக 2 இலட்சம் மரக்கன்றுகள் நடப் படும்.
கிராமங்களில் மக்கள் கூடும் இடங்களில் ஆலமரக்கன்று நட்டு பராமரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஆலமரக்கன்று நடப்படும். பிற்காலத்தில் வளர்ந்த பின் நிழல் தருவதோடு இயற்கை சூழல் அமைந்த கிராமமாக காணப்படும். வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
காவிரியில் தடுப்பணைகள் கட்ட வேண்டியது என்பது அவசியமாக உள்ளது. புகளூர் பகுதியில் காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட மறு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து சாத்திய கூறுகள் இருக்கும் போது தடுப்பணைகள் கட்டப்படும்.
தடுப்பணைகள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும், குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். காவிரியில் கூடுதலாக தடுப்பணைகள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நெரூர் காவிரி ஆற்றின் வலது கரையில் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் டீசல் என்ஜின்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடலூர் மேல்பாகம் கிராமத்திற்கு உட்பட்ட பெரிய திருமங்கலத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தை தவிர்த்து சற்று தள்ளி கட்ட கோரிக்கை விடுக்கிறீர்கள். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அமைந்தாலும் நிலத்தடி நீர் மட்டம் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
மின் இணைப்புகளை பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். குளித்தலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் அனுமதி பெற்று பயன்பெறலாம்" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வேளாண் இணை இயக்குனர் பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயந்தி உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
