அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற முழுமையான நிதியை ஒதுக்கி பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு, உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் நேற்று நடைபெற்றது.

இதற்கு மாவட்டத் தலைவர் பி.மோகன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எ.தங்க வடிவேல் வரவேற்றார். ஜி.நித்தியானந்தம் கொடியேற்றி வைத்தார்.

இந்த மாநாட்டில், “பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் விடுபட்ட ஆனைமலையாறு -  நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற முழுமையான நிதியை ஒதுக்கி பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆவின் பால் கொள்முதலுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும்.

புதிய மின் வழித்தடங்களை அமைக்கும்போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தேங்காய் கொப்பரை கொள்முதல் விலையை ரூ.100 ஆக உயர்த்த வேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் விவசாயப் பணிகளை இணைக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூதனன், எ.பாலதண்டபாணி, எஸ்.பரமசிவம், கே.ரங்கராஜ் (சிஐடியூ), எ.பஞ்சலிங்கம் (விதொச), கோ.செல்வம் (மலைவாழ் மக்கள் சங்கம்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.