கடலூர்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வருகிற 17-ஆம் தேதி சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு தி.மு.க. நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பால.அறவாழி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் முடிவண்ணன், குமராட்சி ஒன்றிய காங்கிரஸ் செயலாளர் புவனேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், “கொள்ளிடம் வெள்ளாற்றில் தடுப்பனை கட்ட வேண்டும்,

பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,

கடலூர் மாவட்டத்தை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வருகிற 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) சிதம்பரம் காந்திசிலை முன்பு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன், பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கம் ரவீந்திரன், தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், பாலு உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவன் நன்றித் தெரிவித்தார்.