தருமபுரி

பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் பிரீமியத் தொகையை நேரடியாக பொது சேவை மையத்தில் செலுத்திப் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ.சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரீமியத் தொகையை நேரடியாக பொது சேவை மையத்தில் செலுத்தி பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் பயன்பெற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில், தலைமையேற்ற ஆட்சியர் அ.சங்கர், தருமபுரி வட்டம், தளவாய் அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு நிலக்கடலைப் பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியத் தொகை பொது சேவை மையத்தில் செலுத்தியதற்கான ரசீதை  வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இதில் ஆட்சியர் பேசியது:

“பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால்  இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.

அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்கள், பிர்கா விவரங்கள் பொது சேவை மையங்களில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவித் தோட்டக் கலை அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

நெல்லுக்கு பிரீமியம் செலுத்த கடைசி நாள் ஜூலை 31. சோளம், கரும்பு, ராகி, துவரை, உளுந்து, பாசிப்பயறு, காராமணி, எள், நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களுக்கு பிரீமியத் தொகை செலுத்த கடைசி நாள் ஆகஸ்ட் 15. வாழை, மஞ்சள், வெங்காயம் போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு பிரீமியம் செலுத்த கடைசி நாள் செப்டம்பர் 30. 

இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது பிரீமியத் தொகையை பொது சேவை மையங்களில் செலுத்தலாம். 

ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், கிராம நிர்வாக அலுவலர் பயிர் சாகுபடி சான்று ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார் ஆட்சியர்.

இந்த விழாவில், வேளாண் துறை மாவட்ட இணை இயக்குநர் ஆர்.ஆர். சுசீலா, துணை இயக்குநர்கள் க.வீராசாமி, என்.ராஜேந்திரன், கூட்டுறவு இணைப் பதிவாளர் ரேணுகா,  நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன கிளை நிர்வாக அலுவலர் வெங்கடேசன்,  பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.