விபத்தில் விவசாயி இறந்த வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கம் (55). விவசாயி. இவர், கடந்த 2007–ம் ஆண்டு அப்பகுதியில் சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் கணவர் இறந்ததால் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவரது மனைவி குஞ்சம்மாள் அரியலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து ரூ.5 இலட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து அரசு போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது. இதில் ரூ.2 இலட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து அரியலூர் நீதிமன்றத்தில் குஞ்சம்மாள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் வட்டியுடன் சேர்த்து ரூ.4 இலட்சத்து 76 ஆயிரத்து 347 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரியலூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அரியலூர் பேருந்து நிலையத்தில் நின்ற அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வந்தனர்.