திருவண்ணாமலை அருகே போலி மருத்துவர் ஊசி போட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டையை சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவருக்கு காலில் அடிபட்டுள்ளது.
இதையடுத்து சுரேஷ் திருக்கோவிலூர் அருகே உள்ள சித்த மருத்துவமனையில் அருண் என்பவரிடம் சிகிச்சை பெற்று கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற சுரேஷ் தனக்கு மயக்கம் வருவதாக கூறியதை அடுத்து அவரது குடும்பத்தினர் மீண்டும் அருணிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அருண் தொடர்ந்து சிகிச்சை அளிக்க மறுத்ததால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சுரேஷை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அருண் அளித்த தவறான சிகிச்சையால்தான் சுரேஷ் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையறிந்த அருண் தலைமறைவாகிவிட்டார்.
புகாரின்பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அருண் என்பவர் போலி மருத்துவர் என்பதும், அவர் மீது கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
மேலும், இந்த சமபவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருனின் கிளீனிக்கிற்கு சீல் வைத்து, தலைமறைவான அருணை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
