ex chief minister jayalalitha properties is seized to order collectors

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தொடர்புடைய 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்ட ஆட்சியருக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015-ம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்தார். 


இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 
இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
கடந்த ஆண்டு ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதா இறந்தததால் அவர் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க அவரது சொத்துகளை முடக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு சொந்தமான தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் ஜெ.வின் சொத்துகள் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது.