Everyone will unite to create the pure Kanji - the request of the ruler ...
காஞ்சிபுரம்
மாணவர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் தூய்மையான காஞ்சிபுரத்தை உருவாக்க ஒன்றுபடுவோம் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கைலாசநாதர் கோயில் வளாகத்தில் தூய்மை இந்தியா இயக்கம், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை போன்றவை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். அப்போது அவர், “தூய்மையான இந்தியா என்பது மகாத்மா காந்தியின் கனவு. அரசு நகர்ப்புறப் பகுதிகள் உள்பட கிராமப்புறப் பகுதிகளிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தூய்மை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தூய்மையே சேவை இயக்கம் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் நகர் 1400 ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்று தொன்மையான சின்னங்கள் நிறைந்த நகரமாக விளங்கி வருகிறது. இத்தகையப் பெருமை வாய்ந்த நகரத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், 633 கிராம ஊராட்சிகளில் 238 ஊராட்சிகள் முச்ழு சுகாதாரத்தை பின்பற்றும் ஊராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த ஊராட்சிப் பகுதிகளில் கழிப்பறை, சுற்றுப்புறத் தூய்மை பராமரிக்கும் ஊராட்சியாகவும் உள்ளது.
மீதமுள்ள 395 ஊராட்சிகளும் நிகழாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுச் சுகாதாரத்தை பின்பற்றும் ஊராட்சிகளாக அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், முழுமையாக சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கும் ஊராட்சிகளாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, மாணவர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் தூய்மையான காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சம்ஸ்கிருத பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ண பசுபதி, இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், பச்சையப்பன் மகளிர் கல்லூரி முதல்வர் ஆர்.சுப்புலட்சுமி, வேதியியல் துணைக் கண்காணிப்பாளர்கள் சந்திர பாண்டியன், நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
