கோவையில் மனைவி மாயமான வழக்கில் மனைவியை எரித்துக் கொன்று தப்பியோடிய கணவனே குற்றவாளி என காவல்துறையினரிடம் பிடிபட்ட கணவர் ஒப்புக் கொண்டார்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் நிஷா (33). இவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த மெக்கானிக் மனோஜுதீன் (38) என்பவருக்கும் 2003-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இத்தம்பதி கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நிஷாவுக்கு மனோஜுதீன் அழகு நிலையம் வைத்துக் கொடுத்துள்ளார். இதனால் நிஷாவுக்கு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கணவருடன் வசித்து வரும் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக நிஷா சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி வந்துள்ளார்.

அதன் பின்னர் அவர் ஊர் திரும்பவில்லை. இது குறித்து நிஷாவின் தாயார் ஜூலி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் மனோஜுதீனும் தலைமறைவானார். இது குறித்து சரவணம்பட்டி, சூளைமேடு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மெக்கானிக் மனோஜுதீனை சரவணம்பட்டி காவல் துறையினர் பிடித்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவி நிஷாவை கொலை செய்து சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள குப்பைமேட்டில் எரித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து நிஷாவின் உடல் பாகங்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.