மின் இணைப்புடன் பொய்யாக இணைக்கப்படும் ஆதார் எண்கள்; வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வருகின்ற 15ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், மின் இணைப்பு எண்களுடன் வீட்டிற்கு தொடர்பில்லாத நபர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்படுவதால் வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, விவசாயம், குடிசை உள்ளிட்டவற்றுக்கு மானியத்தின் அடிப்படையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மானியம் முறையாக கிடைக்கப்பெறுகின்றதா என்பதை அறிவதை எளிது படுத்தும் வகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இணைப்பு பணிகள் நடைபெற்றன. மேலும் கிராமப் பகுதிகளில் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று இந்த இணைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இணைப்புக்கான காலக்கெடு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 15ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் 100 விழுக்காடு ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு விட்டன என்பதை காண்பிப்பதற்காக வீட்டிற்கு தொடர்பில்லாத நபர்களின் ஆதார் எண்கள் பொய்யாக இணைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மின் வாரியமும் உறுதிபடுத்தியுள்ளது.
மகளுடன் தாய் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: விருதுநகரில் பரபரப்பு
தற்போது ஒரு மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யும் பொழுது இந்த எண்ணின் உரிமையாளர் ஆதார் அட்டை ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது என்று இணையதளத்தில் காட்டுகிறது. இதே நிலை பெரும்பாலானோருக்கும் தொடர்வதால் வீட்டு உரிமையாளர்கள் அதிச்சி அடைந்தனர்.
கிராம மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் “மின் இணைப்பு எண்ணுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டு விடும். சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண்கள் மட்டுமே மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.