ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! எடப்பாடி பழனிசாமி அறிவித்த கையோடு பிரேமலதா எடுத்த முடிவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திமுக போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்கப்படுமா? எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! அதிமுக புறக்கணிப்பு! காரணத்தை அடுக்கிய இபிஎஸ்!
அதிமுக ஆதரவுடன் தேமுதிக சார்பில் விஜய் பிரபாகர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேமுதிகவும் தன்னுடைய நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல்! போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!
அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இன்னும் பாஜக கூட்டணி தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.