ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! அதிமுக புறக்கணிப்பு! காரணத்தை அடுக்கிய இபிஎஸ்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனையடுத்து அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Erode East by-election
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். அவர் மறைவை அடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Chandrakumar
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக போட்டியிடுவதாகவும், வேட்பாளராக
முன்னாள் எம்எல்ஏவும், கொள்கை பரப்பு இணைச்செயலாளருமான வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Edappadi Palanisamy
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு மாபெரும் பேரியக்கமான அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது. மறைந்த கருணாநிதியின் காலந்தொட்டு, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'அராஜகம், வன்முறை என்றாலே திமுக - திமுக என்றாலே அராஜகம், வன்முறை' என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக் காலங்களில், திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.
AIADMK
கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக-வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது.
DMK
திமுக-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே திமுக-வினரின் வாடிக்கை.
AIADMK Boycott
நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அதிமுக புறக்கணிக்கப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.