திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம் என்ன? என்று பார்க்கும் அவல நிலை உள்ளது.

கள்ளக்குறிச்சியில் அதிமுக மகளிரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ''இங்கு திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தை பார்க்கும்போது வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. அதிமுக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கி வைத்தது அதிமுக ஆட்சி தான். கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதிமுக கொண்டு வந்தது. திமுக அரசு அதை திறந்து வைத்துள்ளது. நாம் பெற்ற பிள்ளைக்கு திமுக அரசு பெயர் வைத்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம் என்ன? என்பதை போன்று கொலை நிலவரம் என்ன? என்று பார்க்கும் அவல நிலை உள்ளது.

கள்ளக்குறிச்சியில் 68 பேர் உயிரிழப்பு

திமுக அரசு தமிழக டிஜிபியையே நியமனம் செய்யவில்லை. நிரந்த டிஜிபி நியமிக்கப்பட்டால் தான் குற்றங்களை தடுக்க முடியும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்து விட்டனர். அவர்களின் உறவினர்களை பார்த்து ஆறுதல் சொல்ல கூட முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறவில்லை. சினிமா பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது. சைக்கிள் ஓட்டுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால் மக்களை பார்ப்பதற்கு நேரம் இல்லை. மாவட்ட ஆட்சியர் பொய் சொன்னதன் காரணமாகத்தான் கள்ளக்குறிச்சியில் 68 பேர் உயிரிழந்தனர். இதற்கு திமுக அரசும், காவல்துறையும், ஆட்சியாளர்களுமே காரணம்.

125 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும்

தமிழகத்தில் டாஸ்மாக் அதிகமாக இருந்த காரணத்தால் தான் இளம் விதவைகள் உருவாகிறார்கள் என்று அதிமுக ஆட்சியின்போது கனிமொழி தெரிவித்தார். ஆனால் இப்போது ஏன் அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு. ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு. இதுதான் திமுகவின் இரட்டை நிலைப்பாடு. அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான் மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாளாக உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக திமுக அரசு பொய் சொல்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 125 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும்'' என்றார்.