தலையில்லாத முண்டமாக தமிழகம் காட்சியளிக்கிறது..! ஸ்டாலின் ஆட்சிமீது இபிஎஸ் அட்டாக்..!
நான்காண்டுகள் கண்டுகொள்ளவில்லை, இன்று மக்கள் செல்வாக்கு இழந்து, தோல்வி பயத்தில் இன்று கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கிறார்.

‘‘அதிமுக ஆட்சி அமைவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், அப்படி சாதிக்கும் வல்லமை படைத்த தாய்மார்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்’’ என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், வாழவந்தான்குப்பம், சேலம் -உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ‘‘குழந்தைகளுக்கு எதிரான குற்றம் 50% அதிகரிப்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 2022-23 விட 2023-24 இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதுகாப்பில்லை. பயிருக்கு வேலி போல் மக்களுக்கு காவல்துறை வேலி. அதற்கு இன்றுவரை இந்த அரசு சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமிக்கவில்லை. டிஜிபி இருந்தால் தான் நடவடிக்கை எடுப்பார். தலையில்லாத முண்டமாக தமிழகம் காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி தொடர வேண்டுமா?
கள்ளச்சாராய மரணம் முதலில் மூன்று பேர் இறக்கிறார்கள். அப்போது மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., எம்.எல்.ஏ மூவரும் இணைந்து பேட்டி கொடுக்கிறார்கள். பல்வேறு காரணங்களினால் இறந்தனர் என்றார் மாவட்ட ஆட்சியர். கள்ளச்சாராயம் குடித்துத்தான் இறந்தனர் என்று உண்மையைச் சொல்லியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அடுத்தநாள் உற்றார், உறவினர்கள் வந்து அதே கள்ளச்சாரயம் அருந்தியதால் 65 பேர் இறந்தனர். இதற்குக் காரணம் ஆட்சியர், எஸ்பி, எம்.எல்.ஏ. இவர்கள் உண்மையைச் சொல்லியிருந்தால் மக்கள் உஷாராகியிருப்பார்கள். ஆட்சிக்கு கெட்டபெயர் வந்துவிடும் என்று மறைத்ததால் இன்று 68 பேரை இழந்துவிட்டோம். இதற்கு முழு பொறுப்பையும் ஸ்டாலின் அரசுதான் ஏற்க வேண்டும்.
நாம் ஆட்சியில் இருக்கும்போது பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுக்கும்போது ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார். நான் கோரிக்கை வைத்தேன். இப்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னோம். ஆனால் 3 ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தார். இந்த ஆட்சியில் தொடர்ந்து வலியுறுத்தினோம், லேப்டாப் கொடுக்கச் சொன்னோம். சட்டமன்றத்தில் பேசினோம், பொதுவெளியில் பேசினோம். நான்காண்டுகள் கண்டுகொள்ளவில்லை, இன்று மக்கள் செல்வாக்கு இழந்து, தோல்வி பயத்தில் இன்று கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கிறார்.
இது அதிமுக ஆட்சியின் திட்டம், அதை வரவேற்கிறோம். அதிமுக ஆட்சி திட்டம் சிறப்பான திட்டம் என்று ஏற்றுக்கொண்டு இன்று கொடுத்திருக்கிறார். கொடுப்பது சரி, கல்லூரி ஆரம்பிக்கும்போதே கொடுத்திருக்க வேண்டும். கொடுத்திருந்தால் லேப்டாப் வாங்கி இருக்க மாட்டார்கள். மாணவர் சுமை குறைந்திருக்கும். பொம்மை முதல்வர் அதனால் ஒன்றும் தெரியவில்லை.
தொழிற்துறை அமைச்சரும், ஸ்டாலினும் நிறைய முதலீடுகளை கொண்டுவந்தோம் என்று சொல்கிறார்கள். அப்படியெனில் வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கேட்டால் வெள்ளை பேப்பரை நீட்டுகிறார். அதுதான் உண்மை எதுவுமே செய்யவில்லை.
திமுகவில் பொன்முடி இருந்தால், அவர் மகன் தான் வருவார். நேரு என்றால் அவர் மகன் தான் வருவார். திண்டுக்கல் பெரியசாமி என்றால் மகன் தான் வருவார். இப்படி வாரிசுதான் வரமுடியும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ யார்? சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்படிப்பட்டவருக்குக் கூட பதவி கிடைக்கும் கட்சி அதிமுக. இங்கு, ஏழை, பணக்காரன் பாகுபாடு பார்ப்பதில்லை’’ எனப்பேசினார்.
