Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி பாதுகாப்பு குளறுபடி.. பின்னணியில் இருந்து செயல்படுவது யார்..? ஈபிஎஸ் காட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

EPS tweet on PM Modi Punjab visit
Author
Tamilnádu, First Published Jan 6, 2022, 8:20 PM IST

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பதிண்டாவில் தரையிறங்கினார். மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மேகம் தெளிவடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் வரை விமான நிலையத்திலேயே அவர் காத்திருந்தார். ஆனால், வானிலை சீரடையாததால், சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிடப்படடது. பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னர், பிரதமர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தை அடைந்தபோது, ​​​​சில எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமரும் அவரது வாகன தொடரணியும் 15-20 நிமிடங்கள் சிக்கிக் கொண்டன. இந்த இடத்தில் இருந்து பிரதமர் பயணம் செய்ய வேண்டிய பகுதி 18 கி.மீ தூரத்தில் இருந்தது. இது குறித்து இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி. பிரதமரின் அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பிறகு, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு செல்ல முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து, உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை மாநில அரசிடம் கேட்டுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பதிண்டா விமான நிலையத்துக்கு திரும்பியவுடன் அங்கு பிரதமரின் பாதுகாப்புக்காக வந்திருந்த மாநில காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "என்னால் உயிருடன் விமான நிலையத்தை அடைய முடிந்தது, இதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு மாநில அரசே காரணம் என்றும் உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் இதுக்குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. பாரதப்பிரதமர் பதவி என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது. அந்த பதவிக்கு என்று உலகம் முழுவதும் மரியாதை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் பயணம் செய்து இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமை சேர்த்து வருகிறார். இந்நிலையில் இந்த பாதுகாப்பு குளறுபடி தவறுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடிக்கு பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குளறுபடியை கடுமையாக கண்டிப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் வேறெங்கும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios