திமுகவை வீழ்த்த அதிமுக தயாராக உள்ளது என்றும், பாஜகவுடனான கூட்டணி குறித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு கேளுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று அதிமுக கூறவில்லை என்றும் அவர் கூறினார்.
அதிமுகவின் கூட்டணி : தமிழகத்தில் திமுக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக உள்ளது. இந்த அணியை எதிர்கொள்ள அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படாத நிலையில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. இதே போல அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் திமுக கூட்டணியிடம் அதிமுக தோல்வியை தழுவியது.
தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்
இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா பதவியிடங்களுக்கு இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டணி அமைத்த போதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என தெரிவித்திருந்தார்.
பாஜகவுடன் கூட்டணியா.?
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது என தெரிவித்தார். எங்களது ஒரே எதிரி தி.மு.க தான் என கூறிய அவர், மற்ற எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். வாக்குகள் சிதறாமல் அதனை ஒருங்கிணைத்து தி.மு.க-வை வீழ்த்துவது தான் எங்களது முதன்மையான கடமை என கூறினார்.
ராஜ்யசபா சீட் நாங்கள் கூறினோமா.?
எனவே இதனை 2026 தேர்தலில் நாங்கள் நடத்திக் காட்டுவோம் என தெரிவித்தார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து ஆறு மாதங்களுக்கு பின்னர் கேளுங்கள் என தெரிவித்தார். அடுத்தாக தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்க இருப்பதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்கு தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என்று நாங்கள் கூறினோமா? மற்றவர்கள் கூறுவதன் அடிப்படையில் என்னிடம் கேள்வி எழுப்பாதீர்கள்" எனத் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
