சேலம் மாவட்டத்தில் மதுபான கடை அருகில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை
தமிழகத்தில் கள்ளச்சாரய மரணத்தால் கடந்த இரண்டுகளில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாரயம் விற்பனையை ஒழிக்க தமிழக போலீசார் களம் இறங்கினர். பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் இடங்கள் அடித்து உடைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கள்ளச்சாரய விற்பனை தொடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அதில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வளையமாதேவி பகுதியில் அரசு மதுபான கடை அருகில் கள்ளச்சாராய விற்பனையானது நடைபெற்று வரும் காட்சிகள் வெளியானது.

கள்ளச்சாரய விற்பனை- வெளியான வீடியோ
அதில் கள்ளச்சாராயம் விற்பனையாளரிடம் வீடியோ எடுக்கும் நபர் கேட்கும் பொழுது தான் திமுக பிரமுகரை சேர்ந்தவர் என்றும், போலீசருக்கு மாமூல் கொடுத்து தான் இந்த கடை நடத்தி வருகிறோம் என கூறுகிறார். மேலும் வீடியோ எடுக்க வேண்டாம் சரக்கு வேண்டும் என்றாலும் பெற்றுக்கொள்ளுங்கள் என கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?
"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்"
"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும். போதாக்குறைக்கு, "திமுக கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?

அனைவரையும் கைது செய்திடுக
தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா திரு. ஸ்டாலின் அவர்களே? உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.