சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சமூக விரோதிகள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Sathirapatti police station attack ADMK condemnation : திருமங்கலம் தொகுதியில் உள்ள சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சமூக விரோதிகள் சேதப்படுத்தி, காவலரை தாக்கி, காவல் நிலையத்தை பூட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பம் நடைபெற்ற இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பார்வையிட சென்றார். அவரை தடுத்த போலீசார் கைது செய்து கல்லுப்பட்டி பேரையூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

சத்திரப்பட்டி காவல்நிலையம் மீது தாக்குதல்

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை! காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!

வெட்கமாக இல்லையா முதல்வரே? இபிஎஸ்

நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் ஸ்டாலின். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே? காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! என தெரிவித்துள்ளார்.