கச்சத்தீவைத் தாரைவார்த்த தமிழ்நாடு விரோத சுயநல திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வரலாற்றுத் தவறால் இன்று வரை தமிழகத்தின் மீனவர்கள் சொல்லொண்ணாத் துயர்களுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளது
தமிழ்நாட்டின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாகி விட்டது. நமது மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். சில நேரங்களில் தமிழக மீனவர்களை இரக்கமின்றி துப்பாக்கியாலும் சுடுகின்றனர்.
தொடர்கதையாகும் மீனவர்கள் பிரச்சனை
மீனவர்கள் கைது செய்யப்படும்பொதெல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், அவர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு கான மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தூத்துக்குடி மீனவர்கள் சிறை பிடிப்பு
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கம்போல் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழையால் தமிழக மீனவர்கள் இப்போது பெருந்துயரில் ஆழ்ந்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த ரீகன் என்பவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள், சிங் அவர்களுக்கு சொந்தமான 1 விசைப்படகு என நான்கு விசைப்படகுகளையும், அதில் உள்ள தமிழக மீனவர்களையும் நேற்று (22.12.2025) இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கச்சத்தீவைத் தாரைவார்த்த திமுக- காங்கிரஸ் கூட்டணி
கச்சத்தீவைத் தாரைவார்த்த தமிழ்நாடு விரோத சுயநல திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வரலாற்றுத் தவறால் இன்று வரை தமிழகத்தின் மீனவர்கள் சொல்லொண்ணாத் துயர்களுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளது. திமுக கூட்டணியின் ஒற்றைத் தவறைத் திருத்தவே இன்று வரை அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், படகுகள் மற்றும் உடைமைகளை உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


