சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.2000 கோடி மதிப்பிலான குடியிருப்புத் திட்டத்திற்கு தி.மு.க. அரசு அனுமதி அளித்திருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் சுமார் 1250 குடியிருப்புகளைக் கட்ட விடியா தி.மு.க. அரசு அனுமதி அளித்திருப்பது, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் செயல் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. அரசின் ‘நில அபகரிப்பு’
பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, மீண்டும் தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்களின் சொத்துக்களை மிரட்டிக் கபளீகரம் செய்வதுடன், அரசுக்குச் சொந்தமான நிலங்களையும் பெரு முதலாளிகளுக்குக் கையூட்டுப் பெற்றுக்கொண்டு தாரை வார்க்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, சதுப்பு நிலங்களைக் காப்பதற்கான நியதியை மீறி, சுமார் 15 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு குடியிருப்பு கட்ட அனுமதி அளித்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பருவமழைக் காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் முக்கிய வடிகாலாகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கு இதயமாகவும் விளங்குகிறது.
எனது தலைமையிலான அம்மாவின் அரசுதான், மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.165.68 கோடி செலவில் 695 ஹெக்டேர் சதுப்பு நிலத்தில் "பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் மீட்பு திட்டத்தை" செயல்படுத்த ஒப்புதல் வழங்கி அதைப் பாதுகாத்தது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு மீறல்
பள்ளிக்கரணை சதுப்புநிலம் 'ராம்சார் ஒப்பந்தம்'-படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும்.
இந்த சதுப்பு நிலத்திலோ அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளோ எந்தவிதமான கட்டுமானங்களோ, சாலை கட்டுமானங்களோ மேற்கொள்ளக் கூடாது என்று தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் (24.9.2025) தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை சி.எம்.டி.ஏ. (CMDA) தனது அலுவலர்களுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பிய பின்னரும், தி.மு.க. அரசு அதை மீறி தனியார் கட்டுமானத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
வெள்ளத்தில் மக்கள் உயிருக்கு ஆபத்து
நவீன தொழில்நுட்பத்துடன் கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், சதுப்பு நிலத்தில் கட்டப்படும் அக்கட்டிடங்களின் உறுதித்தன்மை கேள்விக்குறியே என்றும், பெரும் வெள்ளம் மற்றும் புயலுக்கு அக்கட்டிடங்கள் தாங்காது என்றும் வல்லுநர்கள் எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாசகாரத் திட்டத்தில், தி.மு.க. அரசு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடுவதை ஏற்க முடியாது. சென்னையின் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்திற்கு வனத்துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன?
இதில் தொங்கி நிற்கும் ஊழல் என்ன? இதில் பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா? என்பதை இந்த தி.மு.க. அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க.வின் எச்சரிக்கை
சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் அரணாகத் திகழக்கூடிய இந்த சதுப்பு நிலத்தில் எந்தவொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்த இந்த அரசு அனுமதிப்பதை அ.தி.மு.க. வேடிக்கை பார்க்காது. கழக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
