Asianet News TamilAsianet News Tamil

கிராமத்திற்குள் புகுந்து வீடு, வாகனங்களுக்கு தீ வைப்பு; பேருந்து மீது கல்வீச்சு…

entered the-house-of-the-village-vehicles-fired-throwin
Author
First Published Dec 6, 2016, 11:20 AM IST


அரக்கோணம்,

அரக்கோணத்தில், இளைஞர் கொலைச் செய்யப்பட்டதை கண்டித்து கிராமத்திற்குள் புகுந்து, வீடுகள், வாகனங்களுக்கு தீ வைத்தும், பேருந்து மீது கல்வீசியும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் அருகே மேலாவதம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபி என்பவரின் மகன் செல்வம் (37). தனியார் பேருந்து ஓட்டுநர். ஞாயிற்றுக்கிழமை இரவு வேலூரிலிருந்து மின்னல் வழியாக அரக்கோணத்திற்குச் சென்ற பேருந்தை ஓட்டிச் சென்றார். மின்னல் காலனி அருகே பேருந்தில் ஏறிய அதே பகுதியைச் சேர்ந்த பசுவான் உள்பட 3 பேர் பயணச்சீட்டு எடுக்காமல் நடத்துநருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை ஓட்டுநர் செல்வம் கண்டித்தபோது 3 பேரும் செல்வத்தை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து செல்வம் மேலாவதம் பகுதியில் உள்ள தனது தம்பி லோகேஷிற்கு (33) தெரிவிக்கவே அவர் தனது நண்பர்களுடன் மின்னல் காலனி பகுதிக்குச் சென்று பசுவான் மற்றும் அவருடைய நண்பர்களை தட்டிக் கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லோகேஷை பசுவான் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு ஆதரவாளர்களுடன் ஓடிவிட்டார்.

இரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த லோகேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட லோகேஷ் விவசாய கூலி தொழிலாளி ஆவார். அவருக்கு மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலாவதம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அந்த கிராமத்தை 30–க்கும் மேற்பட்டவர்கள் இரவோடு இரவாக மின்னல் காலனி பகுதிக்கு ஆயுதங்களுடன் சென்று ஒவ்வொரு வீட்டின் கதவு, ஜன்னல், கண்ணாடிகளை உடைத்தனர். ஒரு குடிசை வீட்டுக்கும் அவர்கள் தீ வைத்தனர்.

மேலும், வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளையும் உடைத்ததோடு மூன்று மோட்டார் சைக்கிள்களையும் அவர்கள் தீ வைத்து கொளுத்தினர். 10–க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்து கண்ணாடியையும் அவர்கள் உடைத்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், அரக்கோணம் சரக உதவி காவல் சூப்பிரண்டு சக்தி கணேசன், தாலுகா காவல் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், ரகுராமன், கோடீஸ்வரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலாளர்கள் மின்னல், மேலாவதம் காலனி பகுதிகளுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.

திங்கள்கிழமை மேலாவதம் காலனி பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மின்னல் காலனி நோக்கிச் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இறங்கி ஓடினார்கள். இது குறித்து தாலுகா காவலில் ஓட்டுநர் பாண்டியன், ஓட்டுநர் உதயசூரியன் ஆகியோர் புகார் செய்தனர்.

மின்னல் காலனி நோக்கி சாலையில் நடந்து வந்த மேல் ஆவதம் காலனியை சேர்ந்தவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் காவலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே லோகேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து அரக்கோணம் தாலுகா காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து பசுவான் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த கிராமத்தில் இராணிப்பேட்டை உதவி ஆட்சியர் முருகேசன், தாசில்தார் குமரவேலு, வருவாய் ஆய்வாளர் வி.வித்யா ஆகியோர் வருவாய்த்துறை சார்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அரக்கோணம் அருகே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios