English Language education up to Class 12 - Government School Students Request to Tamilnadu Government ...

கரூர்

12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கொண்டுவர வேண்டும் என்று கரூர் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்கும் முறையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். 

இதனையடுத்து கடந்த 2012 - 2013-ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

கரூர் மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் கரூர் நகராட்சியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டு இதற்கென தனி வகுப்புகள் உள்ளன. 

ஆனால், இப்பள்ளியை தவிர வேறு எந்த பள்ளியிலும் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கும் வகுப்புகள் இல்லை. 

கரூர் மாவட்டத்தில், கரூர் நகராட்சிக்கு அடுத்து குளித்தலை நகராட்சி உள்ளது. இங்கு அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் என இரண்டு பள்ளிகள் உள்ளன. இந்த இரண்டு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கும் வகுப்புகள் உள்ளன.

இதனால் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவ - மாணவிகள் தங்கள் மேற்படிப்பை தொடர அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேரவேண்டிய நிலை உள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். 

பொருளாதார வசதி இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில மொழி வழியில் படித்திருந்தாலும், 11-ஆம் வகுப்பிற்கு செல்லும்போது தமிழ் மொழி வழியிலேயே கல்வி கற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மனதளவில் மாணவ - மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே, ஏழை மாணவ - மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டு முதலே கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்து குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு மேல்நிலைப் பள்ளிகளிலாவது 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வி துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று மாணவ - மாணவிகள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.