பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவை போலீசார் சுற்றி வலைத்து விட்டதாகவும் என்னை என்கவுன்டர் செய்ய பிளான் பண்ணி விட்டதாகவும், நான் இறந்தால் அதற்கு காரணம் நெல்லை போலீசார்தான் எனவும் அவரே வீடியோவில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பசுபதி பாண்டியன் கொலையில் முதலில் சந்தேகத்திற்கு உள்ளான நபர் ராக்கெட் ராஜா. இவர் இந்தக் கொலை வழக்கில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்றாலும் காவல்துறையின்  சந்தேக வலையத்திற்குள்தான் இருக்கின்றார்.

இவரின் சொந்த ஊர் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி. கராத்தே செல்வினை கொலை செய்த கட்டத்துரையை கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டு அந்த வழக்கிலிருந்து விடுதலையானார்.

வெங்கடேசப் பண்ணையாரின் தளபதியாய் இயங்கிய ராக்கெட் ராஜா அவரின் மறைவிற்கு பிறகு சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து இயங்கினார்.

மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளர் மகளைக் காதலித்து மணம் முடித்து அங்கேயே செட்டில் பலநாட்களை கழித்து வந்தார். மேலும் அங்கு தாதாவாகவும் செயல்பட்டு வந்தார்.

ராக்கெட் ராஜா மீது இருந்த அத்தனை வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டன. 

இந்நிலையில், ராக்கெட் ராஜா நெல்லை போலீசார் தன்னை என்கவுன்டர் செய்ய உள்ளதாகவும் என்னை சுற்றி வளைத்துவிட்டனர் எனவும் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், என்மீது வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில் என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

ஒருவரை தூதுவராக விட்டு கூட என்னை சரணடைய கூறினார்கள். ஆனால் நான் சரணடைந்தாலும் என்னை கொல்வது உறுதி என தூதுவந்தவர் கூறிவிட்டு சென்றார்.

இது முழுக்க முழுக்க நெல்லை எஸ்.பி அருண் சக்திவேல் குமாரின்  தவறான புரிதலால் நடைபெற்று வருகிறது.

இது என்னுடைய கடைசி வாக்குமூலமாக கூட இருக்கலாம். என்னை முறையாக கையாண்டால் நான் சரணடைகிறேன். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது முழுக்க முழுக்க நெல்லை போலீசாரையே சாரும்.

இவ்வாறு ராக்கெட் ராஜா அந்த வீடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.