சிவகங்கையில் பிரபல ரவுடி கார்த்திகை சாமி போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடும்போது சுட்டுக்கொல்லப்பட்டான்.

மதுரையில் இருந்து சிவகங்கைக்கு நோக்கி 6 பேர் காரில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது  வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு காசு கொடுக்காமல், அங்கிருந்த ஊழியரை தாக்கிவிட்டு, பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலீசில் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வேல்முருகன் என்ற காவலர் உட்பட 3 பேர் அவர்களை தடுக்க முயன்றனர்.

ஆனால் போலீசாரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதனை தடுக்க முயன்ற வேல்முருகனுக்கு கை சுண்டுவிரலிலும், கண் புருவத்திலும் காயம் ஏற்பட்டது. இது குறித்த உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த கும்பலை காவல்துறையினர் விரட்டிச் சென்றனர்.

அந்த கும்பல், மானாமதுரை அருகேயுள்ள புதுக்குளம் பகுதியில் உள்ள முந்திரிதோப்பில் ஒளிந்து கொண்டனர். அவர்களை சுற்றிவளைத்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது ரவுடி கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில்  ரவுடி கார்த்திகை சாமி என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

கார்த்திகை சாமி மீது  மதுரை, திருப்பூர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இச்சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.