Asianet News TamilAsianet News Tamil

வால்பாறையில் 22 நாட்களாக அட்டகாசம் செய்துவந்த பெண் காட்டுயானை மயங்கி விழுந்து இறப்பு…

elephant was died which is rolled in valley for 22 days.
elephant was died which is rolled in valley for 22 days.
Author
First Published Aug 30, 2017, 8:00 AM IST


கோயம்புத்தூர்

வால்பாறையில் கடந்த 22 நாட்களாக அட்டகாசம் செய்துவந்த பெண் காட்டு யானை, கும்கி யானைகளால் விரட்டிச் சென்றபோது மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வனச்சரக பகுதிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாள்களாக பெண் காட்டுயானை ஒன்று குடியிருப்புக்குள் புகுந்தது. இந்த யானை வீடுகள், வாழை மரங்களை சேதப்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதியவர் ஒருவரையும் அந்த காட்டுயானை மிதித்துக் கொன்றது. இதனால் ஆவேசமடைந்த தோட்டத் தொழிலாளர்கள் அந்த காட்டு யானையை நிரந்தரமாக குடியிருப்புப் பகுதியில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வனத் துறையினர் கலீம், மாரியப்பன், பரணி ஆகிய மூன்று கும்கி யானைகளை கொண்டுவந்து அந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி நேற்று கும்கி யானைகளைக் கண்டதும் கருமலை எஸ்டேட் பகுதியில் நின்றிருந்த அந்த காட்டு யானை வெள்ளமலை எஸ்டேட் பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்ட பகுதியில் போய் நின்று கொண்டது.

கால்நடை மருத்துவர் மனோகரன், உலாந்தி வனச்சரகர் கிருஷ்ணசாமி, வால்பாறை வனச்சரகர் சக்திவேல், மானாம்பள்ளி வனச்சரகர் சேகர், ஓய்வு பெற்ற வனச்சரகர்கள் தங்கராஜ், வனச்சரகர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரக வனத்துறையினர் அந்த காட்டுயானையை காஞ்சமலை எஸ்டேட் வழியாக சிங்கோனா வனப்பகுதிக்கு விரட்டிக் கொண்டு சென்று விடும் பணியைத் தொடர்ந்தனர்.

ஆனால், அந்த காட்டுயானை கும்கியானைகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பச்சைமலை எஸ்டேட்டிற்கும் நடுமலை எஸ்டேட்டிற்கும் இடைப்பட்ட சின்ன வனச் சோலைக்குள் போய் பதுங்கிக் கொண்டது. ஆனால் மூன்று கும்கி யானைகளும் விடாமல் வனச் சோலைக்குள் சென்று அந்த காட்டுயானையை கண்டுபிடித்து விரட்டிக் கொண்டு வெள்ளமலை ஆற்று பகுதிக்கு வந்தன.

பின்னர், அந்த காட்டுயானை வெள்ளமலை ஆற்றில் இறங்கி நீந்தி நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு தேயிலைத் தோட்ட பகுதிக்குள் போய் நின்று கொண்டது.

இதனை தொடர்ந்து அந்த காட்டு யானை அங்கிருந்து சிறிது தூரம் நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு 17–வது நம்பர் தேயிலைத் தோட்டத்திற்குள் நடந்து சென்றது. இந்த நிலையில் அந்த காட்டுயானை திடீரென்று கால்கள் தள்ளாடியபடி தேயிலைத் தோட்டத்திற்குள் மயங்கி விழுந்தது.

உடனே கால்நடை டாக்டர் மனோகரன் யானையின் உடலை பரிசோதித்தார். அப்போது அந்த யானை இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவர் மனோகரன் கூறியது:

“இறந்த பெண் யானைக்கு வயது 50 முதல் 60 வயதுக்குள் இருக்கும். இந்த யானை வயது முதிர்ந்த நிலையில் பற்கள் முழுவதும் தேய்ந்து போன நிலையில் நீண்ட நாட்களாக போதிய உணவு சாப்பிடாத நிலையில் இருந்துள்ளது. இதனால் தனது உடலில் சக்தியில்லாத நிலையில் காணப்பட்டது.

மேலும் யானையின் உடல்முழுவதும் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டும் இருந்தது. இதற்கிடையில் அந்த யானை நீண்ட தூரம் சக்தியில்லாத நிலையில் நடந்து வந்ததாலும் மிகவும் பலவீனம் அடைந்தது. மேலும் ஆற்றில் இறங்கி நீந்திச்செல்லும் போது ஆற்றுத் தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்திருக்கலாம். இதுபோன்ற பல காரணங்களால் அந்த காட்டுயானை இறந்திருக்கலாம்” என்று அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அந்த காட்டுயானை இறந்தது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்ததும், பிரேத பரிசோதனை செய்த பிறகு யானையின் உடல் புதைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios