தொடரும் சோகம்.. அதிவேகத்தில் யானை மீது மோதிய ரயில்.. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்
வாளையாறு - மதுக்கரை அருகே யானை மீது ரயில் மோதிய விபத்தில் யானை உயரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்துடன் உயிர் தப்பி சென்ற குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
யானை மீது மோதிய ரயில்
ரயில்களில் யானை அடிபட்டு உயிரிழக்கும் சம்பவம் நாளுக்கு நாள் நடைபெற்றுவருகிறது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துஉத்தரவிட்டுள்ளது. முக்கியமான வன பகுதி போக்குவரத்தான கோவை-பாலக்காடு வழித்தடத்தில் வாளையாறு-மதுக்கரை இடையே ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு ரயில் பாதைகள் உள்ளன. தினந்தோறும் இந்த வழித்தடத்தில் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி யானை உட்பட மூன்று யானைகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி உயிரிழந்தன.
பெண் யானை உயிரிழப்பு
இந்த சம்பவத்தையடுத்து வேகக்கட்டுப்பாடு சோலார் விளக்கு, ஒலி எழுப்பி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள வனப்பகுதி வழியாக கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கி சென்ற விவேக் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சென்றுள்ளது. அப்போது 17 யானைகள் கொண்ட ஒரு காட்டு யானைக் கூட்டம் ரயில் பாதையை கடந்துள்ளது.
அதிகாலை 3.40 மணியளவில் இந்த யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மற்றும் குட்டி யானை மீது ரயில் மோதியுள்ளது.
குட்டி யானை காயம்
யானை மீது ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலையே பெண் யானை உயிரிழந்துள்ளது. அப்போது குட்டியானை ஒன்றுக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தோடு காட்டுக்குள் சென்ற குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானை உயிரிழந்தது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.