வேலூர்

அரசுப் பொதுத் தேர்வுகள் முடியும் வரை மின் பராமரிப்புப் பணிகள் நடக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்ட மின்வாரிய மண்டல தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

"தமிழகத்தில் மின் வாரியத்திற்குச் சொந்தமாக 1600 துணை மின் நிலையங்கள் உள்ளன. இந்த துணை மின் நிலையங்களில் உள்ள மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட நாள்கள் இடைவெளியில் முன் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டு மின் விநியோகம் நிறுத்தப்படும். அப்போது, துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசுப் பொதுத் தேர்வு மார்ச் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளதால், இக்காலங்களில் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

மிகவும் அவசியமாக பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டியிருந்தால் காரணத்தைக் குறிப்பிட்டு மின் பகிர்மான இயக்குநரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

மேலும், காலை நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் இந்தப் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.