மின்சார வாகனப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திலும் சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. 

சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் : நவீன காலத்திற்கு ஏற்ப வாகனங்களின் வகைகளும் மாறி வருகிறது. மேலும் காற்று மாசு, எரிபொருள் செலவு, தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு காரணங்களால், மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக அரசுகளும் மானியங்களையும் அறிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் மின்சார வாகனங்களில் பயணிக்கும் மக்களிடையே, குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்பே சார்ஜிங் தீர்ந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

சென்னையில் அதிகமாக விற்பனையான மின்சார வாகனங்கள்

இதனையடுத்து மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன் படி தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களில், கணிசமானவை தலைநகர் சென்னையில் தான் பயன்பாட்டில் உள்ளன. போக்குவரத்து நெரிசல், குறுகலான சாலைகள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு போன்ற காரணங்களால், சென்னை மக்கள் மின்சார வாகனங்களை அதிகம் அளவில் பயன்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பதை உணர்ந்துள்ள சென்னை மாநகராட்சி, ஒவ்வொரு மண்டலத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்

அந்த வகையில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம், சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக சென்னையில் 9 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னையில் முதற்கட்டமாக மின்சார சார்ஜிங் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்,

1) பெசன்நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங்.

2) பெசன்ட்நகர் கடற்கரை பார்க்கிங்.

3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்.

4) தி.நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்.

5) தி.நகர், சோமசுந்தரம் மைதானம்.

6) செம்மொழி பூங்கா, ஆயிரம் விளக்கு.

7) மெரினா கடற்கரை பார்க்கிங்

8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா.

9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா

இந்த திட்டத்தில் சேர்ந்து செயல்பட தனியார் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து டி.என்.ஜி.இ.சி நிர்வாக இயக்குனர் அனீஷ் சேகர் கூறுகையில், சென்னையில் மின்சார வாகனங்களுக்கு முதற்கட்டமாக 9 இடங்களில் சார்ஜிங் நிலையம் அடுத்த 2 மாதங்களில் பணிகள் துவங்க உள்ளது. குறிப்பாக இடங்கள் தேர்வு செய்து சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான பவரிங் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த 15 நாட்களில் டெண்டர் அறிவிக்கப்படும், அதன் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றார்.