Asianet News TamilAsianet News Tamil

வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் சிஸ்டம்: தேர்தல் ஆணையம் முடிவு!

வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் சிஸ்டம் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது

Election Commission to install GPS tracking system in vehicles used for polling purposes smp
Author
First Published Apr 9, 2024, 10:12 AM IST

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் இருப்பிட கண்காணிப்பு அமைப்பை நிறுவ தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“தேர்தலுக்கு முந்தைய நாளில் வாக்குச் சாவடிக்கு விநியோகம் செய்யப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு உதவும் இதர பொருட்களை ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்பு காண்கானிக்கவும், எந்தவித குளறுபடியும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படும். வாக்குப்பதிவுக்குப் பிறகு அவைகள் வைக்கப்படும் அறைக்கு அவற்றை கொண்டு செல்வதை கண்காணிக்கவும் அந்த அமைப்பு உதவும்.” என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்துவதுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பள்ளிக் கல்வித் துறை இணைச் செயலர் அர்னாப் சட்டர்ஜியை இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. ராகுல் நாத்துக்குப் பிறகு அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களை இப்படி கைது செய்வது சர்வாதிகாரம்... இது ஜனநாயகம் அல்ல: ராபர்ட் வதேரா

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios