இந்தியாவில் முதன்முறையாக நெல்லித்தோப்பு தொகுதியில் ஆன்லைனில் ஓட்டுப்பதிவு முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரேந்திர ஓஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையம் முன்மாதிரி திட்டமாக எலக்ட்ரானிக் முறையில் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளை இந்த முறையில் பதிவு செய்யப்படும்.
தபால் ஓட்டு முறை கடந்த காலங்களில் (போஸ்டல் பேலட்) பேப்பர் முறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இது போன்ற நடைமுறையில் சிக்கல்களும், தாமதங்களும் ஏற்பட்டு வந்தது.
எனவே தேவையற்ற காலதாமதத்தை தடுக்கும் வகையில் இந்திய அரசின் மத்திய மேம்படுத்த கணினி அமைப்பு மூலம் இந்த ஆன்லைன் வாக்கு செலுத்தும் முறை அமல்படுத்தப்படுகிறது.
தபால் வாக்கு செலுத்துவோர் இமெயில் அல்லது செல்போன் மூலம் ரகசிய எண்ணை பெற்று போஸ்டல் பேலட் பேப்பரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும். இதனை உறுதி செய்து கொள்வதற்கு தனிப்பட்ட அடையாள எண்ணையும் அங்கேயே பெற்றுக்கொள்ள முடியும். பின்னர் பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளை தபால் மூலம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது 100 சதவீதம் நம்பகத்தன்மை கொண்டது.
புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் ஆன்லைனில் வாக்களிக்கும் முன்மாதிரி திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
