EPS : ஜெயலலிதா படத்தோடு பாமக பிரச்சாரம்.! விக்கிரவாண்டி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி போட்ட முக்கிய உத்தரவு
அதிமுகவை பாமக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும், ஜெயல்லிதாவின் உருவப்படத்தை பயன்படத்தி வாக்கு சேகரிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைபாடு காரணமாக காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியான திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்து வாக்காளர்களை ஷாக் கொடுத்தது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே போட்டி உருவாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
ஜெயலலிதா படத்தோடு பிரச்சாரம்
பாமக தலைவர் அன்புமணி விக்கிரவாண்டி தொகுதியில் வீதி, வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பாமகவின் பிரச்சார பொதுக்கூட்டங்களின் நடைபெறும் பேனரில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கூட உருவப்படத்தையும் இடம்பெற செய்துள்ளனர். எனவே தேர்தலை புறக்கணித்துள்ள அதிமுகவின் வாக்குகளை கவர்வதற்காகவே பாமக திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணியும் அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் நமது பொது எதிரி திமுக தான் என தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் விக்கிரவாண்டி மாவட்ட செயலாளர் முதல் கிளைச் செயலாளர் வரை அனைத்து நிர்வாகிகளிடமும் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது அதிமுகவின் வாக்குகள் பாமகவிற்கு செல்லக்கூடாது என்றும் தேர்தல் புறக்கணிப்பை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
எடப்பாடி முக்கிய உத்தரவு
அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக அதிமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்துள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் நேரடியாக சென்று நாம் தமிழர் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் மூலம் அதிமுகவின் வாக்குகளை தங்கள் அணிக்கு இழுக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். எனவே அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தாலும் விக்கிரவாண்டி தொகுதி அதிமுகவினர் யாருக்கு சதாகமாக வாக்களிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்