பொதுமக்களிடம் இருந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆறுகளில் வீசப்படுவதோடு டீக்கடைகளில் போண்டா மடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதனையோடு தெரிவித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தீயசக்தி திமுகவை அடியோடு அகற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம். திமுக ஆட்சி அகற்றப்பட இன்னும் 3 அமாவாசை தான் உள்ளது.
அதிமுக ஆட்சியில் நாங்கள் வழங்கிய 95 சதவீத வாகுறுதிகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். ஆனால் திமுக ஆட்சியில் வெறும் 5 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்தார். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. கொரோனா காலத்தில் கூட சிறப்பான ஆட்சியை நடத்திக்காட்டி சிறப்பான ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு அதிமுக தான் உதாரணம்.
நாட்டிலேயே கடன் வாங்கியதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. என்னையும், உங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழர்களையும் கடன்காரர்களாக்கியது தான் திமுகவின் சாதனை. திமுக அரசு 5 லட்சத்து 16000 கோடி கடன் வாங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அதனால் தான் சீன பிரதமர் மாமல்லபுரத்திற்கு வந்து இந்திய பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள் இருந்தாலும் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் முதல் இடத்தில் இருப்பது அதிமுக மட்டும் தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பொதுமக்களிடம் ஊர் ஊராக சென்று மனுக்களைப் பெற்றார். அதே போன்று ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்கள் அனைத்தும் ஆற்றில் வீசப்பட்டன. மேலும் டீக்கடைகளில் போண்டா மடிப்பதற்கு மட்டுமே அந்த மனுக்கள் தற்போது பயன்படுவதாக குற்றம்” சாட்டி உள்ளார்.


