எனக்கே பாடம் எடுக்குறீங்களா? அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தரமான பதிலடி கொடுத்த இபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் நிதி மேலாண்மையை விமர்சித்து, அதிகரித்து வரும் கடன் மற்றும் வருவாய் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

Edappadi Palanisamy response to Minister thangam thennarasu tvk

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ் நாட்டு மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து, 2021ல் ஆட்சிக்கு வந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, இன்று இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் முதலிடம் என்ற சிறப்பைப் பெற்று, அளவுக்கு அதிகமாக கடனை பெற்றுள்ளது என்பதை நான் சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் நிதி நிலைமை சீரழிந்து வருவதாக, நான் குறிப்பிட்டுப் பேசிய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், எனக்கு பொருளாதார நிதி மேலாண்மை குறித்து அடிப்படை புரிதல் இல்லை என்று தமிழ் நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

ஒரு சிறந்த நிதி நிர்வாகம் என்றால்: நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, வருவாய் பற்றாக்குறை அறவே நீங்குதல் - கடன் வாங்கும் அளவை கட்டுப்படுத்தி, வாங்கும் கடனை மூலதன செலவிற்கு செலவிட வேண்டும். இதுதான் சிறந்த நிதி நிர்வாகத்திற்கு அடையாளம் என்று, நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது கூறியவர்கள், அப்போதைய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்கள்; இன்றைய அமைச்சர்கள் தான்.

அப்போது உண்மையிலேயே நாங்கள் வாங்கிய கடனின் அளவு மாநில உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்குள் தான் இருந்தது. ஆனால், இப்போது விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசில் கடன் சதவீதம் 26 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதையே நாங்கள் சொன்னால் எங்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதா ? திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. வருவாய் பற்றாக்குறையை நீக்கிவிட்டார்களா ? குறைந்தபட்சம் அந்த அளவையாது குறைத்தார்களா? என்றால் இல்லை.

* எங்களது ஆட்சியில், நிதி ஆணைய பங்கீடு குறைந்தபோதும், மின்வாரிய கடனை எங்கள் அரசு ஏற்றுக்கொண்டபோதும், 2018-19 வரை வருவாய் பற்றாக்குறை, குறைவாகவே இருந்தது. 

*  அதேபோல், 2020-21ல் கொரோனா பாதிப்பால் அரசின் வரி வருவாய் குறைந்த நிலையில், கொரோனா தடுப்பில் அதிக செலவு ஏற்பட்டதால்தான் வருவாய்ப் பற்றாக்குறை அதிகமானது. 

* அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2021-22 மற்றும் 2022-23ல், வருவாய் அதிகரித்த நிலையில், வருவாய்ப் பற்றாக்குறை குறைந்தது. இது இயல்பான நிலைதான்.

* ஆனால், ஆண்டுதோறும் அதாவது, 2023-24 மற்றும் 2024-25ல், வருவாய்ப் பற்றாக்குறை ஏன் உயர்ந்து வருகிறது? 2022-23ல் ரூ.36,215 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, 2023-24ல் ரூ.44,907 கோடியாக ஏன் உயர்ந்தது? அது, 2024-25ல் ரூ.49,279 கோடியாக உயரக் காரணம் என்ன? 
எனவே, வருவாய்ப் பற்றாக்குறை எங்கள் ஆட்சியில் இருந்ததைவிட அதிகமாகிவிட்டது என்பதே உண்மை. இதற்கு அமைச்சர் விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதேபோல், ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு, வருவாய் அதிகரிக்கும் போது குறைய வேண்டும். வாங்கும் கடன் மூலதனச் செலவிற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால், உண்மை நிலை என்ன? 

* தமிழ்நாடு சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளில், அதாவது 2020-21 வரை, தமிழ் நாடு பெற்ற கடன் அளவைக் காட்டிலும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு இந்த நான்கு ஆண்டுகளில் வாங்கிய கடன் மற்றும் அடுத்து வரும் ஐந்தாவது ஆண்டில் (2025-2026) வாங்க உள்ள கடன்களின் மொத்த அளவு அதிகமாகி, அதாவது 5 லட்சம் கோடியை தாண்டும் நிலை உள்ளது.

*  இதில் 50 சதவீதம் கூட மூலதனச் செலவிற்கு செலவிடப்படவில்லை. 

*  வாங்கும் கடனின் பெரும் பகுதி வருவாய் செலவிற்கு தான் செலவிடப்படுகிறது. 

இதுதான் நிதி மேலாண்மையா? இதை சுட்டிக் காட்டினால் எனக்கு புரிதல் இல்லை என்று ஸ்டாலின் மாடல் திமுக அரசின் நிதி அமைச்சர் எனக்கு பாடம் எடுக்கிறார். கடன் அளவு என்பது, மொத்த கடன் தொகையை விட, மாநில உற்பத்தி மதிப்பில் கடன் அளவு எத்தனை சதவீதம் உள்ளது என்பதே சரியான அளவு கோல் என்பது எங்களுக்கும் தெரியும்.

ஆனால், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதை நாங்கள் பதிலாகக் கூறியபோது திமுக ஏற்றுக்கொண்டதா? ஜெயலலிதா ஆட்சியில் கடன் அதிகரித்துவிட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்யவில்லையா? இந்த சதவீத கணக்கில்கூட 2019-20 வரை இந்த அளவு 25% தாண்டவில்லை. அப்போதும் மத்திய நிதிக் குழு மற்றும் மத்திய அரசு அனுமதித்த அளவைவிட மிகக் குறைவாகவே பெற்றோம். தற்போதுள்ள ஸ்டாலின் மாடல் அரசைப் போல், கடன் வாங்கியதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெருமையை நாங்கள் பெறவில்லை.

நிதியமைச்சரின் புரிதல்படி சொன்னாலும், 2016-17ல் கடன் அளவு – 21.76 சதவீதம், 2017-18ல் இது 22.29 சதவீதம், 2018-19ல் இது 22.62 சதவீதம், 2019-20ல் இது 23.58 சதவீதமாக இருந்தது. 2020-21ல், கொரோனா பாதிப்பால் கடன் அளவு 26.94 சதவீதமாக உயர்ந்தது. இந்த விபரங்கள் எல்லாம் சிஏஜி அறிக்கையிலேயே உள்ளது. ஆனால், கடன் அளவைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர் கணக்குப்படியே 2021-22ல் கடன் அளவு 27.01ரூ, 2022-23ல் கடன் அளவு 26.87ரூ, 2023-24ல் கடன் அளவு 26.72ரூ, 2024-25ல் கடன் அளவு 26.40ரூ ஆக உயர்ந்துள்ளது.

எனவே, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், இப்போது நிலுவைக் கடன் அளவு 26% தாண்டிவிட்டது. எந்த வகையில் இவர்கள் கடன் அளவைக் குறைத்துள்ளார்கள்? இதை நிதி அமைச்சர் தான் விளக்க வேண்டும். மேலும், நாங்கள் அடிக்கல் நாட்டிய, சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2-ஆம் கட்டத்திற்கு செலவழிக்கும் ரூ. 26,000 கோடி நிதியை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த செலவு, மூலதனச் செலவில்தான் வரும். இந்தத் தொகைகளை கூட்டினால்கூட, இந்த ஆட்சியில் மூலதனச் செலவு உயரவில்லை. அப்படியானால், பல திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு வாங்கும் கடன், வருவாய் செலவினங்களுக்கே செலவிடப்படுகிறது என்பதைத் தானே இது காட்டுகிறது,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 50,000 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு வழங்கியதாகக் கூறியுள்ளார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிவடைய உள்ளது. மின்வாரிய நிர்வாகத்தை மந்திர கோல் கொண்டு சீரமைப்போம் என்று சொன்ன திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு இதுவரை செய்தது என்ன? விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இதுவரை மூன்று முறை மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. இவற்றையும் மீறி, மாநில அரசு மின்சார வாரியத்திற்கு நிதி வழங்குகிறது என்றால், மின்வாரிய நிதி மேலாண்மை சீரழிந்துள்ளதையே இது காட்டுகிறது.

"திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டின் நிதி மேலாண்மையை மேம்படுத்துவோம்" என்று மக்களை ஏமாற்றி, இதற்காக ஒரு உபயோகமற்ற சர்வதேச நிபுணர் குழுவையும் அமைத்து நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் அளவு என எல்லா நிதிக் குறியீடுகளிலும் பின்னடைவை சந்தித்ததுதான் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை. மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அறிக்கை வெளியிடுவதை விடுத்து, வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் திட்டங்களைப் போடாமல், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் தீட்டி அவைகளை செயல்படுத்த, நல்ல நிதி மேலாண்மையில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும், எங்களுக்கு நிதி மேலாண்மை பற்றி பாடம் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios