பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம்: ஓபிஎஸ் முகத்தில் பிரகாசம்!
பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்

தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தங்கள் கட்சியையும் கட்சி தலைவர்களையும் விமர்சித்ததால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக அதிமுக அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இந்த கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், “உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணி முறிந்துள்ளது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அல்ல; பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல்.” என அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றச்சொல்ல, எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது? என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், பாஜக தலைமை அதிமுகவில் எடப்பாடியை மாற்றச் சொன்னால், செய்வார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் நிலைப்பாட்டை அறிவித்த பின் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். பாஜக 3ஆவது முறையாக ஆட்சியில் அமரும் தகுதியை பெற்றுள்ளது. கடந்த 1 மாதமாக டெல்லி பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள்.” என்றார்.
பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “ஓ.பன்னீர்செல்வம் அணி கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்பதை பாஜகவிடம்தான் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அண்ணாமலை பேசியது தவறானவை, ஆனால் அவர் உள்நோக்கத்தோடு பேசியதாக நாங்கள் கருதவில்லை. 2026ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை பேசியதால் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்துள்ளார்.” என்றார்.
அதிமுக பொதுக்குழு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது பற்றி பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டப்போராட்டமும், புரட்சிப் பயணமும் தொடரும் என்றார்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுக ஒன்றிணையும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுக்க இபிஎஸ் முயற்சி மேற்கொண்டதில் இருந்து ஓபிஎஸ்சுக்கு தொடர் பின்னடைவே ஏற்பட்டு வருகின்றன. இதனால், ஒருவிதமான இறுக்க மனநிலையில் இருந்த ஓபிஎஸ், இன்றைய பேட்டியின்போது உற்சாகமாக காணப்பட்டார். பாஜகவின் பார்வை தன் பக்கம் திரும்பும் என்பதாலும், நீதிமன்றக் கதவுகள் தனக்கு திறக்க வாய்ப்புள்ளது என்பதாலும் இயல்பாகவே இந்த உற்சாகம் ஏற்பட்டிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.