சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு மழைநீர் வடிகால் திட்டம் இருப்பதாக ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக், தலைநகர் சென்னை, அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்ன பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் ஆங்காங்கே சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருப்பினும், மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து களத்தில் இருப்பதால், உடனடியாக சரி செய்யப்படுகிறது.

அதேசமயம், கடந்த முறை போன்றெல்லாம் இல்லாமல் சென்னையின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தேங்கிய நீர் தானாகவே உடனடியாகவே வழிந்தோடி விடுகிறது. இதற்கு தமிழக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளே காரணம் என கூறப்படுகிறது. இருந்தலும், பணிகள் முடியாத அல்லது பராமரிக்கமால் இருக்கும் சில இடங்களில் நீர் தேங்குவதும் அது உடனடியாக சரிசெய்யப்படுவதும் என ஊழியர்கள் பம்பரமாக இயங்கி வருகின்றனர். தமிழக அரசும் கட்டுப்பாட்டு அறை அமைத்து நிலைமையை கண்காணித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் உள்ளார்.

இந்த நிலையில், சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு மழைநீர் வடிகால் திட்டம் இருப்பதாக ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற "திமுக மாடல் ரோடு", "இரண்டரை ஆண்டு கால விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி" என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. 

Scroll to load tweet…

விடியா திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதே சாட்சி. மக்களின் துயர் துடைக்க விடியா அரசே நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

கனமழை மீட்பு பணிகள்: அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

முன்னதாக, கடந்த 27ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. பின்னர், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்திற்குள் மேலும் வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற டிசம்பர் மாதம் 2ஆம் தேதி புயல் சின்னமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.