ராமநாத ஸ்வாமி கோயிலால் மட்டுமல்ல, ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் மணி மண்டபத்தாலும், ராமேஸ்வரம் பெருமை அடைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதத்துடன் பேசினார்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மணிமண்டபம் திறப்பு விழா, ராமேஸ்வரத்தில் நடந்தது. பிரதமர் மோடி மணி மண்டபத்தை திறந்துவைத்தார். இதில், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன், வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

இந்திய நாட்டின் 11வது குடியரசு தலைவராக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பதவி வகித்தது, இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கு தலை சிறந்த பெருமை.

ஏவுகணை நாயகனுக்கு இன்று மணி மண்டபம் கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழா நடந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலால் மட்டும் புகழ் பெறவில்லை. இன்று ஏவுகணை நாயகனின் மணி மண்டபம் கட்டப்பத்தாலும், பெரும் சிறப்பு பெற்றுள்ளது.

மக்கள் ஏழ்மையாக இருந்தாலும், பாமர மக்களாக இருந்தாலும், உண்மை, உழைப்பு, அறிவு, அன்பு, தன்னம்பிக்கை ஆகியவை கொண்டு சாதனை படைத்து, உலகையே திரும்பி பார்க்க செய்தவர் அப்துல்கலாம். அவருக்கு தமிழகத்தில் மணி மண்டபம் கட்டியதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.