ஆண்டுதோறும் மழை காலங்களில் தமிழகத்துக்கு வரும் தண்ணீர், வீணாக கடலில் கலக்கிறது. இதனை தடுக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆறுகளுக்கு இடையே போதுமான அளவு தண்ணீர் தேக்கி வைக்க அணை கட்டுவது, குளம், குட்டை, ஏரிகளை தூர் வாருவது போன்ற பணிகளில் அரசு மற்றும் பொதுப்பணி துறை ஈடுபட்டு வந்தன.

இதையொட்டி காவிரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், உபநதியான பவானியில் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், அந்த தண்ணீரும் தேக்கி வைக்க முடியாமல் கடலில் சென்று கலந்து வருகிறது. இந்த தண்ணீரை சேமித்து வைத்தால், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை போக்கலாம்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன், இதுபோன்ற பணிகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டு வரப்பட்டது. பவானி நதியில்ர இருந்து உபரிநீர் கால்வாய் அமைத்து, 72 குளம், 538 குட்டைகளில் தண்ணீரை தேக்கி வைத்து சேமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை.

இதனால், தண்ணீருக்காக அவதியடைந்து வரும் மக்கள், பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் என அறப்போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து கடந்த 2016 பிப்ரவரி 19ம் தேத இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு சார்பில் ரூ.2.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இன்றுடன் ஒரு ஆண்டு ஆகியும் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி இன்று அதிகாலை முதல் அவினாசி தாலுகா அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் 5000 பேர் வரை கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த போராட்டம் தொடர்ந்து நடக்குமா என்பது குறித்து, இன்று மாலை அறிவிக்கப்படும் என போராட்ட குழுவினர் தெவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து மக்கள் பணி வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தது. கடந்தடிசம்பர் 5ம் தேதி அவர் காலமான பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனாலும், எவ்வித மக்கள் பணியும் நடந்ததாக குறிப்பிட்டு கூற முடியவில்லை.

இதையொட்டி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்ற 3வது நாளிலேயே பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ள பொதுப்பணி துறையை கண்டித்து நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், அவரை தேர்ந்தெடுத்த கொங்கு மண்டலத்தில் நடப்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.