Asianet News TamilAsianet News Tamil

எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: ரூ.2.14லட்சம் பறிமுதல்!

சென்னை எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.14லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

DVAC raid in chennai ezhilagam rs 2.14 lakh seized
Author
First Published Jul 6, 2023, 5:01 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டட வளாகத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், எழிலகம் வளாகத்தில் உள்ள நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் தொழில்துறையை முடக்கும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை விளாசல்!

நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பைத் தடுக்கும் பிரிவின் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் இந்த சோதனையானது விடிய விடிய நடைபெற்றது. ஒப்பந்ததாரர்களின் லைசென்ஸை புதுப்பிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் முடிவில், ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத இந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் இல்லாததால், மேல் விசாரணைக்காக உதவி செயற்பொறியாளர் பாஸ்கரை லஞ்ச ஒழிப்பு துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios