வறண்டது மேட்டூர் அணை..! 110 நாட்களுக்கு முன்னதாகவே தண்ணீர் திறப்பு நிறுத்தம்- விவசாயிகள் அதிர்ச்சி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முற்றிலுமாக சரிந்த நிலையில், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகளை ஏமாற்றிய காவிரி
தமிழகத்தில் விவசாயத்திற்கு முக்கிய பங்காற்றி வரும் காவிரி நீர் இந்த ஆண்டு விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்மூலம் டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பயன்பெறும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி வரை தொடங்கி ஜனவரி 28 ஆம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. மேலும் கர்நாடகமும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் டெல்டா பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு நிறுத்தம்
தமிழ்நாடிற்கு காவிரியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதந்தோறும் பிரித்து வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஜூன் மாதம் முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை கர்நாடகம் 28 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு தந்துள்ளது. 46.9 டி.எம்.சி. தண்ணீர் இன்னும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முற்றிலுமாக சரிந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியை நம்பி பயிரிட்ட பயிர்கள் கருகும் சூழல் உருவாகியுள்ளது.
விவசாயிகள் கவலை
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 8 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 110 நாட்களுக்கு முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பது இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் மேட்டூர் அணையில் இருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 30.90 அடியாக உள்ளது.
இதையும் படியுங்கள்
தமிழகத்திற்கு காவிரி நீர்..! அதிமுகவின் ஒத்துழைப்போடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்