தொடரும் கன மழை... சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர் இருப்பு என்ன.? வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பா.?
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் இருப்பானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கன மழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மழையானது பெய்து வருகிறது. ஏற்கனவே தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இதனால் அணைகளில் இருந்து நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்தநிலையில் தற்போது வங்க கடலில் புயல் உருவாகியுள்ளதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
நிரம்பும் நீர் பிடிப்பு பகுதிகள்
இந்தநிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய நீர் தேக்கங்கள் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து காரணமாக வேகமாக நிரம்பி வருகின்றன. பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரம் 35 அடியில் தற்போது 31.63 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியில் தற்போது 2142மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து இன்னைக்கு 730 கனடி வந்து கொண்டிருக்கிறது நீர் வெளியேற்றம் குடிநீருக்கு 38 கன அடி திறந்து விடப்படுகிறது. புழல் நீர் தேக்கத்தில் அதன் மொத்த கொள்ளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3006 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 21.20 அடியில் தற்போது 19.97அடி உயரம் நீர் இருப்பு உள்ளது.
அணைகளில் நீர் இருப்பு என்ன.?
நீர்வரத்து 985 கன அடியாக உள்ளது. உபரி நீர் 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. குடிநீருக்கு 150 கன அடி வினாடிக்கு அனுப்பப்படுகிறது. சோழவரம் நீர் தேக்கம் அதன் மொத்த உயரம் 18.86 அடியில் 17.15 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடியில் தற்போது 816 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 242 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 600 கன அடியாக உள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரி நீர் வெளியேற்றம் 4,000 கன அடியில் இருந்து 402 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்வரத்து 1431 கன அடியாக உள்ளது.
இதையும் படியுங்கள்