சரசர வென உயரும் மேட்டூர் அணை நீர் மட்டம்... ஒகேனக்கல்லில் பொங்கி வரும் காவிரி- மகிழ்ச்சியில் விவசாயிகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியிலிருந்து 10,514 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது நீர்மட்டம் 55.82 அடியாக உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையும் விவசாயமும்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தேங்கி வைக்கப்படும் நீரை கொண்டு, டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதே போல இந்தாண்டும் மேட்டூர் அணையானது 100 அடியை தாண்டியதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நீரால் டெல்டா மாவட்டங்கள் பயன் அடைந்தது. இந்தநிலையில் கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய முறையில் திறக்கப்படாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதள பாதாளத்திற்கு சென்றது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35 அடியை எட்டியது. இதன் காரணமாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.
மேட்டூர் அணை- நீர் திறப்பு நிறுத்தம்
இதனையடுத்து 22 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காவும், மீன் வளத்திற்காகவும் அணையில் 4 டிஎம்சி முதல் 9 டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க வேண்டும் என்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் கர்நாடக மற்றும் தமிழக பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இன்றைய நிலவரம் படி, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 11 ஆயிரம் அடியாக உள்ளது.
சரசரவென உயரும் மேட்டூர் அணை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 14500 கனவாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 11000 நிலையாக உள்ளது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாக நீர்வரத்து மாலைக்குள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியிலிருந்து 10,514 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது நீர்மட்டம் 55.82 அடியாக உள்ளது. 21.67 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படியுங்கள்
தொடர்ந்து உயரும் தக்காளி, வெங்காயம், இஞ்சி விலை.. கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?