சிவகங்கை

அடிக்கடி விபத்து ஏற்படுவதால் திருச்சி - இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நெடுஞ்சாலை துறையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஏற்கனவே மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகரில் திருச்சி - இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருப்பத்தூர் சாலை என்று அழைக்கப்படும் இச்சாலையில்தான், தேவகோட்டை நகரில் உள்ள முக்கியப் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.

சில மாதங்களுக்கு முன், தேவகோட்டை பேருந்து நிலையம் முதல் சிவன் கோயில் வரை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. ஆனாலும், தேவகோட்டை ஆண்டவர் செட் பகுதி, ஒத்தக்கடை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் ஒத்தக்கடை பகுதியில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகியும் உள்ளனர்.

இதுகுறித்து ஒத்தக்கடை பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலை துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மழைக் காலம் என்பதால், ஆண்டவர் செட் பகுதியில் உள்ள பள்ளங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் செல்லும்போது மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு இந்தச் சாலையை செப்பனிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையிடம் மக்கள் மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.