DSP khadar basha bail petition Adjourned by high court

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸால் தேடப்படும் டிஎஸ்பி காதர்பாஷா முன் ஜாமின் மனு ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரையில் ஆரோக்கியராஜ் என்பவரிடமிருந்து 6 பழங்கால சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரான காதர்பாஷா மற்றும் போலீஸ்காரரான சுப்புராஜ் ஆகியோர் கைப்பற்றியதாகவும், பின்னர், அதை விற்று இருவரும் பணத்தை பிரித்து எடுத்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் இதற்கான ஆதரங்களை ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் காதர்பாஷா டிஎஸ்பியாகவும், சுப்புராஜ் சிறப்பு சார்பு-ஆய்வாளராகவும் உள்ளனர்.

எனவே இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முன்பு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவரிடம் சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிஎஸ்பி காதர்பாஷாவை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார் நீதிபதி.

அதற்கு டிஎஸ்பி காதர்பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தகவல்தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன் ஜாமின் கோரி காதர்பாஷா மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படும் இந்நேரத்தில் என் பெயரை கெடுக்கும் வகியில் சிலர் இந்த குற்றசாட்டுகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.