Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தின் உறுதி தன்மையில் சந்தேகம்; ஆய்வு செய்யகோரி பயணிகள் கோரிக்கை...

doubt on Tiruvannamalai bus stand Request by passengers to study
doubt on Tiruvannamalai bus stand Request by passengers to study
Author
First Published May 21, 2018, 9:07 AM IST


திருவண்ணாமலை 

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கும், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இதனால், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பயணிகள் கூட்டம் காணப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் சேதங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

இருப்பினும் இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடத்தில் பயணிகளுக்கு நிழலுக்காக கட்டப்பட்டுள்ள நிழற்கூரையின் மேல் பகுதி சேதமடைந்து சில இடங்களில் விரிசல்விட்டும் காணப்படுகின்றன. 

ஆங்காங்கே சில இடங்களில் சிமெண்டு கூரைகள் உடைந்து கம்பிகள் வெளியே தென்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் திருக்கோவிலூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் நிழற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் உடைந்து விழுந்தது. இதில் பயணி ஒருவர் காயமடைந்தார். 

பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு ஓரிரு மாதங்களேயான நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சிமெண்டு பூச்சுகள் விழுந்த இடத்தில் கம்புகள் கொண்டு சாரம் கட்டப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகிறதாம். ஆனால் எந்தவித பணியும் நடைபெறாமல் உள்ளதால், இது மக்களுக்கு இடையூறாக உள்ளது. 

எனவே, திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் உள்ள நிழற்கூரையின் மேல் கூரைகள் சேதமடைந்து காணப்படுவதால், பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து  நிலையத்தில் உள்ள கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios