பிரபல யூடியூப் சேனலில் காமராஜரை விமர்சித்த திமுக அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி இருப்பதே. விஜய் நேரடியாக ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது அதிக எம்எல்ஏக்களை வெல்வாரா அல்லது வாக்குகளை பிரிப்பாரா? என்றே பல கேள்விகள் உள்ளது என்று கணிக்கின்றனர்.

அதிமுகவுக்கு கிடைக்கக்கூடிய ஆட்சிக்கு எதிரான மனநிலை வாக்குகளும், திமுகவுக்கு சாதகமாக உள்ள சிறுபான்மை வாக்குகளும் குறிப்பிடத்தக்க அளவில் விஜய்க்கு திரும்பும் என சொல்லப்படுகிறது. இதோடு பெண்கள், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளிட்ட புதிய வாக்கு வங்கி விஜயை நோக்கி நகரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பாரம்பரிய கட்சிகளின் கணக்குகள் சிக்கலாக உள்ளன.

இந்த பின்னணியில், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பட்டினப்பாக்கத்தில் விஜய் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு தேசிய அரசியல் வரை கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வியூக ஆலோசகர்களில் ஒருவரும், காங்கிரஸின் புதிய டேட்டா அனலிஸ்ட் பிரிவின் தலைவருமான பிரவீன் சக்ரவர்த்தி, ராகுல் காந்தியின் பிரதிநிதியாக விஜயை சந்தித்ததாக தகவல் வெளியானது. 

இந்த சந்திப்பு கூட்டணி அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியதாக பேசப்பட்டது. பிறகு அது மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரை காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நண்பர் என்ற முறையில் சந்தித்ததாக வேலுசாமி விளக்கம் அளித்திருந்தாலும், தவெக–காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், திருவாரூரில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் பிரமுகர் செந்தில்பாண்டியனின் குடும்ப நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரே மேடையில் கலந்துகொண்டது கூடுதல் கவனத்தை பெற்றது. திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவாரூர் வரை ஒரே காரில் பயணம் செய்த போது, ​​கூட்டணி அரசியல் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, “பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்தது குறித்து தனக்கு தெரியாது” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்த நிலையில், வேலுசாமியின் சந்திப்புகள் உள்கட்சியில் கூட சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், காங்கிரஸின் எதிர்கால கூட்டணி குறித்து பல்வேறு ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன.

இந்த சூழலில், அண்மையில் பிரபல யூடியூப் சேனலில் காமராஜரை விமர்சித்த திமுக அமைச்சரை கடுமையாக தாக்கியுள்ளார் திருச்சி வேலுசாமி. அவர் “2026ல் திமுக–பாஜக மறைமுக கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும். காங்கிரஸுக்கு தெரியாத விஷயமல்ல. விஜய் இப்போதுதான் வந்தவர் என்றால், உதயநிதி யார்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

அவரது இந்த பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பிரவீன் சக்ரவர்த்தி - விஜய் சந்திப்பு திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருச்சி வேலுசாமியின் இந்த பேச்சு மேலும் கூட்டணிக்குள் கலக்கத்தை உண்டாக்குமா? திமுக இதனை எப்படி ரசிக்கும்? என்று பல கேள்விகளை அரசியல் வட்டாரத்தில் உண்டாக்கி உள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களால் வைரலாகி வருகிறது.